Sunday, November 4, 2012

பாணான் மரபு


பழங்காலத்தில் ஜாதியப் பிரிவுகள், அவரவர்கள் குழுவாகச் செய்யும் தொழிலின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. தச்சு வேலை, கொல்லு வேலை, தங்க வேலை, கல்வேலை – என்று தனித்தனித் தொழிலை மட்டும் செய்கிறவர்களை, ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குள்ளேயே தனித்தனி பிரிவுகளாக வகுத்திருந்தார்கள்.
சலவைத்தொழில் செய்கிறவர்களிலும், அந்தக் காலத்தில் ரெண்டு மூன்று வகையினர் இருந்தனர். உயர் ஜாதிக்காரர்களுக்குச் சலவை செய்து கொடுக்க என்று ஒரு பிரிவினரும் தாழ்ந்த ஜாதிக்காரர்களுக்கு சலவை செய்து கொடுக்க என்று ஒரு பிரிவினரும் இருந்தார்கள்.
இன்றைக்கு நவீன இயந்திரங்களின் பயன்பாடு வந்த்தால் குறிப்பிட்ட சில வேலைகளைக் குறிப்பிட்ட சில ஜாதிக்காரர்கள்தான் பார்க்க வேண்டும் என்ற நிலை மாறிவிட்டது. சான்றாக மரம் அறுக்க இயந்திரங்களும், மரத்தடிகளை இழைக்க இயந்திரங்களும் இன்று பயன்பாட்டிற்கு வந்துவிட்டதால், எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களிலும் ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் தச்சுத் தொழிலைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
மரக் கட்டில்களையும், மேஜை, நாற்காலி போன்ற மரச் சாமான்களையும் விதவிதமாகத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் பலவும் நாட்டில் பெருகிவிட்டன. அத்தொழிற்சாலைகளில் தச்சுத்தொழில் செய்யும் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் பணி செய்வதில்லை. சகல ஜாதியைச் சேர்ந்தவர்களும், அத்தொழிற்சாலையில் பணி செய்கிறார்கள்.
இதே போல, இரும்பு சம்பந்தப்பட்ட வேலைகளும், இன்று இயந்திரமயமாகி விட்டன. செருப்புத் தைப்பது, சலவை செய்வது, சிகை அலங்காரம் செய்வது என்பது போன்ற பல தொழில்கள், இன்று ‘ஜாதி’ என்ற எல்லையைத் தாண்டிப் பொதுமைப்பட்டு விட்டன.
‘தையல் வேலை’. தையல்கலை சம்பந்தப்பட்ட வேலைகளையும் பழங்காலத்தில் குறிப்பிட்ட ஒரு ஜாதியைச் சேர்ந்த மக்கள் மட்டுமே செய்தார்கள். கையால் தையற் வேலை செய்து வாழ்ந்த அந்த மக்கள் ‘பாணான்’ என்ற குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். பாணான் என்பதின் பெண்பால் பெயர் பாணாத்தி என்பதாகும்.
இசை பாடி மக்களை மகிழ்வித்தவர்கள் ‘பாணன்’ என்று அழைக்கப்பட்டார்கள். தையல் கலையை மட்டும் செய்து வாழ்ந்த மக்களை ‘பாணான்’ என்று அழைத்தார்கள். ‘பாணன்’ என்பதையும் ‘பாணான்’ என்பதையும் பிரித்தறிந்து பொருள் புரிந்து கொள்ள வேண்டும்.
தையல் இயந்திரம் கண்டு பிடிக்கப்படும் முன்பு நம் நாட்டில் வாழ்ந்த மக்கள், கையால் தைக்கப்பட்ட ஆடைகளையே அணிந்திருக்கிறார்கள். தையல் வேலை செய்கிறவர்களிலேயே பல பிரிவினர் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறார்கள்.
கிழிந்த பழைய துணியை தைத்துக் கொடுத்து மட்டும் (இன்றைக்கு கிழிந்தா பழஞ்சாக்கைத் தைத்துக் கொடுப்பதைப்போல) தொழிலாகக் கொண்டு சில பாணான்களும், பாணாத்திகளும் வாழ்ந்திருக்கிறார்கள். பழைய கிழிந்த வேட்டிகளையும், பழைய கிழிந்த சேலைகளையும், சட்டைகளையும் மட்டும் கையில் ஊசி நூல் கொண்டு தைத்துக் கொடுத்து, அதற்குக் கூலியாகத் தானிய தவசங்களையும், சாப்பிட கஞ்சியும் வாங்கி இருக்கிறார்கள்.
கிழிந்த பழந்துணிகளைப் பொதுமக்களுக்குத் தைத்துக் கொடுத்து அதிலிருந்து வரும் எளிய வருவாயைக் கொண்டு தன் கால ஜீவனத்தைக் கழித்த பாணானும், பாணாத்தியும் அன்றையச் சமூக அமைப்பில் விளிம்புநிலை மக்களாகவே இருந்திருக்கிறார்கள்.
இன்னும் பேச்சுவழக்கில் ஒருவனை அல்லது ஒருத்தியைத் திட்டும்போது ‘போடா… பாணாத்தி…’ என்று சொல்லி வைகிறார்கள். (ஏசுகிறார்கள்) இந்த வசவில் பாணாத்தி என்ற சொல் இழிநிலையிலேயே கையாளப்படுகிறது.
பாணான்களிலும் அந்தக் காலத்தில் ரெண்டு மூணு வகையினர் இருந்திருக்கிறார்கள். அவர்களில் மிகவும் கடைநிலையில் உள்ளவர்கள்தான் கிழிந்த பழந்துணியைத் தைத்திருக்கிறார்கள். பாணான்களிலேயே நடுநிலையான அந்தஸ்தில் உள்ளவர்கள் புதிய துணிகளை அளவெடுத்து வெட்டிக் கையில் ஆடைகளாகத் தைத்து மக்களுக்குக் கொடுக்கும் ‘தையல்காரர்’களாக இருந்திருக்கிறார்கள். இத்தகைய தையல்காரர்களுக்கு கூலியும் அதிகமாகக் கிடைத்திருக்கிறது. பாணான்களிலேயே தலைநிலையில் உள்ள தையல்காரர்கள் தையல் கலைஞர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். இவர்கள், அரசர்கள், ஜமீன்தார்கள், பெருந்தனக்காரர்கள்  போன்ற மேட்டுக்குடி மக்களுக்கும், தேரை அலங்கரிக்கவும், பவனி வரும் சாமியின் அலங்காரத்திற்கும், சாமியாடும் கோமரத்தான்களுக்கும் மட்டும் கலை அழகுடன் கூடிய ஆடை அணிகலன்களைத் தைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
தையல் கலை மூலம் கலையழகுடன் கூடிய ஆடைகளைத் தைத்துக் கொடுக்கும், பாணான் என்ற கலைஞர்களை அந்தக் காலத்தில் ஜமீன்தார்களும், குறுநில மன்னர்களும் ஆதரித்திருக்கின்றார்கள். சாமி அலங்காரத்திற்கும், சப்பர அலங்காரத்திற்கும், தேரின் அலங்காரத்திற்கும், கலையழகுள்ள, தையல் வேலைகளைச் செய்து கொடுக்க என்று சில பாணான்களை அரசர்கள் நியமித்து, அவர்களுக்குக் கூலிக்குப் பதில் சில மானியங்களை (முப்போகம் நெல் விளையும் நிலங்களை) வழங்கி இருக்கிறார்கள்.
திருநெல்வேலி டவுனில், கூழைக்கடை பஜாருக்கு அருகில் உள்ள ஒரு சந்திற்கு பாணான் முட்டுச்சந்து என்று பெயர் உள்ளது. நெல்லையப்பர் கோயில் சம்பந்தப்பட்ட தையல்கலை வேலைகளைச் செய்யும் சில தையல் கலைஞர்களின் குடும்பங்கள் மட்டும் அந்தக் காலத்தில் அந்தச் சந்தில் வாழ்ந்திருக்கிறார்கள். எனவே தான அந்தச் சந்திற்கு பாணான் முட்டுச்சந்து என்று பெயர் வந்தது என்று பெரியவர் ஒருவர் என்னிடம் நேர் பேச்சில் கூறினார்.
இன்றும் ‘பாணான்’ இனத்தைச் சேர்ந்த சில குடும்பத்தினர் திருநெல்வேலி டவுனில் வசிக்கிறார்கள். அவர்களில் சிலர், இன்றும் திருவிழாக் காலங்களில் நெல்லையப்பர் கோயில் தேரின் அலங்கார வேலைகளையும், சப்பர அலங்கார வேலைகளையும் பார்க்கிறார்கள்.
தாமிரபரணி ஆற்றின் கரையில் குறுக்குத் துறைக்குப் பக்கத்தில் உள்ள சில வயல்களை ‘பாணான் மானியப் பத்து (கழனி) என்று அழைக்கிறார்கள். வயல்களுக்கு இன்று ‘பாணான் மானியம்’ என்ற பெயர் இருக்கிறதே தவிர, தற்போது அந்த நிலங்கள் சம்சாரிகள் சிலருக்கு உரிமையானதாக உள்ளது. பாணான் வம்சத்தைச் சேர்ந்த முன்னோர்கள் அந்த மானிய நிலங்களை வறுமையின் காரணமாகப் பிறருக்கு விற்றிருக்க வேண்டும்.
எங்கள் வட்டாரத்தில், ஊத்துமலை ஜமீனின் தலைநகரமான வீரகேரளம் புதூரில், சில ‘பாணான்’ இனத்தைச் சேர்ந்த தையல் கலைஞர்கள் வாழ்கின்றனர். தையல் கலை என்பதும் இயந்திர மயமாகிவிட்டதால், இவ்வூரில் உள்ள பாணான் இனத்து ஆடவர்கள், தையல் கடை வைத்து, தையல் வேலை செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களில் ஒரே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பாடாலிமுத்து என்பவர் மட்டும் பாரம்பரியமான தன் தையல் கலையை இன்றும் விடாமல் செய்து கொண்டிருக்கிறார். எங்கள் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஜாதியைச் சேர்ந்த அனைத்துக் கோமரத்தான்களுக்கும் (சாமியாடிகளுக்கும்) தேவையான தலைக் குல்லாய்களையும், ‘சல்லையம்’ என்று சொல்கிற இடுப்பில் – அணியும் நீண்ட டவுசர் (சாட்ஸ்) போன்ற உடுப்பையும் தைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சாமியாடிகள், தலையில் அணிந்துகொண்டு ஆடும் குல்லாய் (தொப்பி) பல வண்ணத்துணிகளால் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டதாக இருக்கும். சாமிகள் அணியும் குல்லாய் பெரும்பாலும் விதவிதமான, கைத் தையல்களால், வண்ணமயமாக உருவாக்கப்படுகிறது, இந்தக் குல்லாய்களின் இடை இடையே மின்னும் கண்ணாடித் துண்டுகளும் கைத் தையலால் பதிக்கப்பட்டிருக்கம்.
அதேபோல சாமியாடிகள் இடுப்பில் அணியும் ‘சல்லையம்’ என்ற உடையும், பல வண்ணத் துணிகளால், அழகிய கலைநயம் மிக்க வேலைப்பாடுகளுடன் கூடியதாகத திகழ்கிறது. காலங்காலமாக, சாமியாடிகளுக்கு, தலைக் குல்லாய்களையும், சல்லையங்களையும், பாணான் இனத்தைச் சேர்ந்த இந்த பாடாலிமுத்துவின் முன்னோர்தான் தைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாணான் மரபில் வந்த பாடாலிமுத்து இன்றும் தன் குலத்தொழிலை கலைநயத்துடன் செய்து வருகிறார்.
இவர், இத் தையல் கலையை குருகுலமாகத் தன் தந்தையாரிடம் இருந்து கற்றுக்  கொண்டதாகக் கூறுகின்றார். வீரகேரளம்புதூரில்  சாமியாடிகளுக்குத் தேவையான அழகிய வேலைப்பாடுகள் மிகுந்த உடுப்புகளையும், குல்லாய்களையும் தைத்து தன் தையல் கடையில் வரிசையாகத் தொங்கப் போட்டிருக்கின்றார். பொதுமக்களில் சிலர் நேர்த்திக் கடனாக இந்த உடுப்புகளை வாங்கி சாமிகளுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறார்கள் என்கிறார்.
சாமியாடிகளுக்குத் தேவையான உடுப்புகளுடன் சாமியாடிகள் கையில் பிடித்து ஆடும் வல்லயக் கம்புகளையும், சாமியாடிகள் கையில் வைத்து அடிக்கும் சாட்டைகளையும் சேர்த்துத் தன் தையல் கடையில் வைத்து விற்று வருகிறார். தையல் கலைஞரான பாடாலி முத்து.
ஆய்வாளர்களின் அதிகக் கவனத்தைப் பெறாத, பாணான் கலைஞர்களைப் பற்றி நாட்டுப்புறவியல் துறைசார்ந்த ஆய்வாளர் யாராவது முயன்று தேடினால் மேலும் அதிகமான தரவுகளை நாம் பெறலாம்.

நன்றி : திரு.கழனியூரன்

No comments:

Post a Comment